திருப்பரங்குன்றத்துக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு திமுகவைச் சேர்ந்த சரவணன் கடிதம் எழுதியுள்ளார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நடத்தக் கோரி, தலைமைத் தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் மனு அளித்துள்ளார். ‘தேர்தல் நடத்த வேண்டாம் என நீதிமன்றம் குறிப்பிடவில்லை. வழக்குகள் நிலுவையில் இருந்தபோதே பல தொகுதிகளில் இதற்குமுன் தேர்தல் நடந்துள்ளன. திருப்பரங்குன்றம் தொகுதி மக்களின் நலன் கருதி அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும்’ என்று அந்த மனுவில் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக புதியதலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “வழக்கு நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் நடத்தவில்லை என்பதை செய்திகள் மூலம் அறிந்தேன். நேற்று தேர்தல் அதிகாரி பேசுகையில், ஓட்டபிடாரம் தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்படும் பட்சத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியிருந்தார். அதனால், திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோளின்படி, நான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற எனது தரப்பு வழக்கறிஞர் மனு அளித்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று தன்னுடைய அறிவிப்பில் தெரிவித்தார். அதனால், காலியாகவுள்ள 21 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கருதப்பட்டது.
ஆனால், 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டபிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தல் கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ தெரிவித்தார். அதிமுக எம்.எல்.ஏ போஸின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதாக திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.