தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சி 9-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் அனுசியா, பிரசாரத்தின்போது ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கு இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதே பகுதி நேரு நகரை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி அனுசியா (வயது 56) தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2 வாரமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைவதால் அனுசியா இன்று காலையிலிருந்தே தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வந்தார்.
வீடு வீடாக நடந்து சென்று ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்தார் அவர். அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடனிருந்த ஆதரவாளர்கள், அவரை உடனடியாக அருகில் இருந்த டாக்டர் ஒருவரை வரவழைத்து பரிசோதித்தனர். மருத்துவர் பரிசோதித்து பார்த்ததில், அனுசியா இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
இதனால் அவரது குடும்பத்தினர், கட்சியினர், அக்கிராம மக்கள் என அனைவருமே அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனுசியா மறைவை தொடர்ந்து, உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்தான் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஐயப்பன் என்பவரும் இதேபோல நெஞ்சுவலியால் இறந்தார். தற்போது தஞ்சை மாவட்டத்திலும் அதுபோன்ற சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது அனைவரையும் வேதனையுடன் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்தி: ரத்தத்தை உறைய வைக்கும் பனியில் உன்னத பணி - வைரலாகும் வீடியோ