திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், கூட்டணி உடன்பாட்டில் தீவிரமாக ஈடு பட்டுள்ளன. பல கட்சிகள் கூட்டணியை முடிவு செய்து தொகுதி ஒதுக்கீட்டையும் முடித்துவிட்டன. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாக, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. தேமுதிக, அந்த கூட்டணியோடு இணையும் என்று தெரிகிறது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனிய ன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தக் கூட்டணியில், காங்கி ரஸ் கட்சிக்கு 10, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து இன்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிவுற்ற நிலையில் மதிமுகவுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் திமுக நடந்தது. இதில், மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.