கடந்த கால தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு 60-க்கும் மேல் சீட் கொடுத்தும், சில இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்களிடையே முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
அப்போது, “காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடம் கொடுத்தால் வெற்றி பெறுமா என்ற திமுகவின் கவலைதான் இந்த சீட் குறைப்பிற்கு காரணம். வெற்றி பெறும் வாய்ப்பை வைத்துத்தான் கூட்டணி கட்சிக்கு இடம் ஒதுக்குவதை கணிப்பார்கள். கடந்த கால தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு 60-க்கும் மேல் சீட் கொடுத்தும், சில இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்ததால் தற்போது சீட் குறைக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியினுடைய தவறுதான்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களை பிடித்த நமது வெற்றிக் கூட்டணி, இந்த தேர்தலில் 208 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும். இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித்தர வேண்டும் என்ற ஒரே கொள்கையின் அடிப்படையில் உருவான கட்சி காங்கிரஸ் கட்சி. ஆனால் வெள்ளையனுக்கு வெண்சாமரம் வீசிய கட்சி பாஜக” என்றார்.