அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் நேரில் சந்தித்து மாநிலங்களவை உறுப்பினர் இடம் குறித்து பேசியுள்ளார்.
அதிமுகவின் கூட்டணி கட்சிகள் மாநிலங்களவையில் ஒரு இடங்களைப் பெறுவதற்காக கடும் முயற்சியில் இறங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக தே.மு.தி.க கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றது. கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்படும் என்று தொடர்ச்சியாக பிரேமலதா விஜயகாந்த் சொல்லி வருகிறார்.
ஆனால் ஒப்பந்தம் எதுவும் போடவில்லை என அதிமுக தரப்பில் தகவல் வெளியானது. அதன் தொடர்ச்சியாக நான்கு தினங்களுக்கு முன்பு தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து நேற்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சுதீஷ் நேரடியாக சந்தித்து சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி ஆகியவையும் மாநிலங்களவை வாய்ப்பை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. திமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் அதிமுக யாரை அறிவிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.