சத்யராஜ் மகள் திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். இவர் கொரோனா காலத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க மகிழ்மதி என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும், நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமர் மோடிக்கு திவ்யா எழுதிய கடிதம் சமூக ஊடகங்களில் வைரலானது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ரத யாத்திரையை நடத்த அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதில், கொரோனா நோய்த்தொற்றுப் பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் ரத யாத்திரை நடந்தால் மக்களுக்கு எளிதாக நோய்த்தொற்று பரவும். எனவே இந்நேரத்தில் ரத யாத்திரை அனுமதிப்பது நியாயம் கிடையாது. தமிழ்மக்கள்மீது கொண்ட அக்கறையாலும், ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும் இதை எதிர்ப்பதாகத் தெரிவித்திருந்தார். திவ்யா சத்யராஜின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதாக தெரிகிறது.
இந்நிலையில் தற்போது ரத யாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்புக் கேட்கமுடியாது என்று கூறியிருக்கிறார்.