18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கு: அக். 9ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கு: அக். 9ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கு: அக். 9ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சட்டப்பேரவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் தரப்பு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார். தங்கள் தரப்பு எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் மீதான நம்பிக்கையை மட்டுமே இழந்துள்ளதாகவும், 18 பேரும் அடிப்படை உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுத்ததாக கொறடா கூறியது தவறு என்றும் சிங்வி தெரிவித்தார். இதற்கிடையே 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் சட்டப்படியே என்று சபாநாயகர் தரப்பில் 500 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை வழக்கறிஞர் அரிமாசுந்தரம் தாக்கல் செய்தார். ஆட்சியை கவிழ்ப்போம் என தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் பேசியதற்கு ஆதாரம் உள்ளது எனவும் சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையும், 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையும் நீடிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார். இதேபோன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கையும், இந்த வழக்குடன் இணைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, அந்த வழக்கு அக்டோபர் 12ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com