திண்டுக்கல்: கேட்பாரற்று கிடந்த 10 கள்ளத் துப்பாக்கிகளால் பரபரப்பு

திண்டுக்கல்: கேட்பாரற்று கிடந்த 10 கள்ளத் துப்பாக்கிகளால் பரபரப்பு
திண்டுக்கல்: கேட்பாரற்று கிடந்த 10 கள்ளத் துப்பாக்கிகளால் பரபரப்பு
Published on

சாணார்பட்டி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட தவசிமடை கிராமம் சிறுமலை ஓடை அருகே கேட்பாரற்று கிடந்த 10 கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி பேரல் கைப்பற்றப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட கிராமங்களில் சிலர் கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தி சிறுமலை மற்றும் தவசிமடை பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா உத்தரவின்பேரில் திண்டுக்கல் ஊரக உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் வினோத் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் சிறுமலை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான குழுவினர் சிறுமலை, தவசிமடை ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில் தவசிமடை கிராமம் நாகம்மாள் கோயில் அருகே உள்ள சிறுமலை ஓடை அருகே 10 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் நாட்டுத்துப்பாக்கி பேரல் ஆகியவை கேட்பாரற்று கிடப்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக தவசிமடை கிராம நிர்வாக அலுவலர் திருவருட்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 10 நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் நாட்டுத்துப்பாக்கி பேரல் ஆகியவை கைப்பற்றப்பட்டது. 

இதேபோல திண்டுக்கல் மாவட்ட மலைகிராமங்களான நத்தம் காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட மலையூர், கரந்தமலை, கொடைக்கானல் காவல்நிலைய சரகம் மன்னவனூர், கூக்கால், பூண்டி, தாண்டிக்குடி காவல்நிலைய சரகம் கே.சி.பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்நிலைய சரகம் பாச்சலூர் ஆகிய பகுதிகளில் சிலர் உரிமம் இல்லாமல் கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருப்பதாக தெரியவருகிறது.

இதனால் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்றும் அவ்வாறு கள்ள த்துப்பாக்கிகள் வைத்திருக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா எச்சரித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com