அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து சசிகலாவை நீக்குவதற்கு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் முனைப்பு காட்டி வரும் நிலையில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற டிடிவி தினகரன் அணியினர் குழுக்கள் அமைத்து பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என தெரிகிறது. செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் பொதுக்குழு கூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக செயற்குழுவில் 250 உறுப்பினர்களும் பொதுக்குழுவில் 2780 உறுப்பினர்களும் உள்ளனர். பொதுக்குழுவைக் கூட்ட ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரவேண்டும். இந்தச் சூழலில் பொதுக்குழு கூடும்போது சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவதற்கான நடவடிக்கைகளை டிடிவி தினகரன் அணியினர் எடுத்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே அவர் கட்சி நிர்வாகிகளை மாற்றி விட்டு புதிய நிர்வாகிகளை அறிவிப்பதாகவும் கூறப்படுகிறது. புதிய நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்களாகி விடுவார்கள் என்பதால் அவர்களை வைத்து காய் நகர்த்த தினகரன் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.