”அவங்களுக்கு ஏன் அவ்வளவு சம்பளம்” தொடரும் வேலைநிறுத்தம்

”அவங்களுக்கு ஏன் அவ்வளவு சம்பளம்” தொடரும் வேலைநிறுத்தம்
”அவங்களுக்கு ஏன் அவ்வளவு சம்பளம்” தொடரும் வேலைநிறுத்தம்
Published on

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கூலி உயர்வை சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் ஏற்காததால் 18 ஆம் தேதி முதல் துணி உற்பத்தியாளர்கள் தொழில் நிறுத்தம் செய்வதென முடிவு செய்துள்ளனர்.இதனால் விசைத்தறித் தொழிலாளர்கள் மீண்டும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சங்கரன்கோவிலில் 5000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் விசைத்தறி்த் தொழிலாளர்கள் மற்றும் வீடு சார்ந்த சிறு விசைத்தறியாளர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படும்.அதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த 28.04.2018 அன்றுடன் காலவதியாகிவிட்டது. இதனால் விசைத்தறித் தொழிலாளர்கள்  கூலி உயர்வு கோரி ஏப்.30ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அனைத்து விசைத்தறித் தொழிலாளர்களுக்கு 19 சதவீத கூலி உயர்வும், சிறு விசைத்தறியாளர்களுக்கு 17 சதவீத கூலி உயர்வும் தேசிய விடுப்புச் சம்பளமாக ரூ.220ம் வழங்க முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து 40 நாள்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.இதனால் மறுநாள் கடந்த 9 ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டது.ஆனால் நூலுக்கு சாயம் போடும் சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் மட்டும் வேலைக்குத் திரும்பவில்லை. சங்கரன்கோவிலில் உள்ள சாயப்பட்டறையில் 50க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் உள்ளனர்.இவர்கள் நூலுக்கு சாயம் போடுவதைத் தொடர்ந்தே துணி உற்பத்தி தொடர்பான அனைத்து பணிகளும் நடக்கும்.

விசைத்தறி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 19 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து தங்களுக்கு 30 சதவீத கூலி உயர்வு வழங்கக்கோரி அவர்கள் வேலைக்கு செல்லவில்லை. வியாழக்கிழமையுடன் 6 ஆவது நாளாக அவர்கள் வேலைக்கு வராததால் நூல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் விசைத்தறிக்கு பாவு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விசைத்தறி உரிமையாளர்கள்(மாஸ்டர்வீவர்ஸ்) வரும் 18 ஆம் தேதி முதல் தொழில்நிறுத்தம் செய்வது என முடிவெடுத்து அறிவித்துள்ளனர்.இதனால் சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள், சிறுவிசைத்தறியாளர்கள் மீண்டும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இருப்பினும் இன்று விசைத்தறி துணி உற்பத்தியாளர்களுக்கும், சாயப்பட்டறைத் தொழிலாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com