காரிமங்கலம் அருகே புறம்போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்ற, அமைச்சர் அன்பழகன் கொடுத்த அழுத்தத்தால், அதிகாரிகள் செயல்பட்டதால், எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த விவசாயி உயிரிழந்தார் என தருமபுரி எம்.பி செந்தில்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிட்டேசம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு மேய்ச்சல் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் வந்துள்ளனர். இதில் விவசாயிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சின்னசாமி என்பவர் அதிகாரிகள் முன்னிலையில் தீக்குளித்தார்.
இதில் படுகாயமடைந்த சின்னசாமியை, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை விவசாயி சின்னசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக படுகாயம் அடைந்த விவசாயி சின்னசாமியிடம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மரண வாக்குமூலத்தை மருத்துவமனையிலேயே பெற்றுள்ளார். எனவே சரியான நீதி கிடைக்க வேண்டுமென, சம்பந்தப்பட்ட வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என சின்னசாமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இன்று தருமபுரி எம்.பி டாக்டர் செந்தில்குமார், சின்னசாமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது... தருமபுரி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த் துறையினர் அகற்றுவது நல்ல விஷயம் தான். ஆனால் தற்போதுள்ள கொரோனா பரவும் அசாதாரண சூழலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சொல்வதற்கு காரணம் என்ன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு யார் அழுத்தம் கொடுத்தார்கள்.
இந்த நிலம் சம்பந்தமான வழக்கு பாலக்கோடு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. காரிமங்கலத்தில் குறிப்பிட்ட சிலருக்காக சாலை அமைக்க, வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாருடைய அழுத்தத்தால் வட்டாட்சியர் இந்த நடவடிக்கை எடுத்தார். தருமபுரி மாவட்டத்தில் ஏரியூர், சித்தேரி, கலசப்பாடி போன்ற மலை கிராமங்களில் 70 ஆண்டுகளாக சாலை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
மலை கிராம மக்களுக்கு சாலை வசதி அமைத்துத் தர 70 ஆண்டு காலமாக இந்த சுதந்திர இந்தியாவில் உள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கடந்த 70 ஆண்டுகளாக மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்துவந்த, விவசாயிகளை தடுக்காமல் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். இதுபோன்ற விவசாய நிலங்களை பயன்படுத்தி வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வட்டாட்சியருக்கு அதிகாரம் இருக்கிறது.
அவர்களுக்கு பட்டா வழங்கி இருக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் விவசாயம் செய்து வந்த இடம் ஓடை புறம்போக்காக இருந்து இருந்தால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அதிமுகவைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த அரசாங்கம் பட்டா வழங்கி வருகிறது. இன்று அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் விவசாயி ஒருவரின் உயிர் பறிபோய் இருக்கிறது. இதற்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும். நேற்று காரிமங்கலம் பகுதியில் பாதிக்கப்பட்ட சின்னசாமி விவசாயி குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லாமல் அந்த பகுதியில் உள்ள மற்றவர்களை சந்தித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.
அதிகாரிகளை கண்டித்து தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட சின்னசாமி குடும்பத்தினருக்கு எதுவும் செய்யவில்லை. கொரோனா காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வட்டாட்சியர் எடுக்காமல், அமைச்சரின் அழுத்தத்தின் காரணமாக இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வந்துள்ளார். இந்த விவசாயின் உயிரிழப்பிற்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில் சொல்ல வேண்டும். மேலும் இவ்வாறு விவசாயிகள் தீக்குளிப்பு சம்பவம் தொடர விடாமல், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த விவசாயின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என எம்.பி. செந்தில்குமார் தெரிவித்தார்.