டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அக்கட்சியின் எம்.எல்.ஏ கபில் மிஸ்ரா புகார் அளித்துள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள அந்தப் புகாரில் கெஜ்ரிவால் சட்டசபையில் 10 சதவீதம்தான் வருகை வைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கும் நாளை விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்ரா, “முதலமைச்சருக்கு 10 சதவீதம் வருகை தான் சட்டசபையில் உள்ளது. முக்கியமான சிறப்பு கூட்டத் தொடர்கள் அனைத்திலும் அவர் பங்கேற்கவில்லை. இது வாக்களித்த டெல்லி மக்களை அவமதிக்கும் செயல் ஆகும். கெஜ்ரிவால் சட்டசபையில் பங்கேற்கவில்லை என்றால், அவரது சம்பளத்தை நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அதோடு மட்டுமல்லாமல், “கெஜ்ரிவால் சட்டசபைக்கு வருமாறு டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு வலியுறுத்த வேண்டும். கெஜ்ரிவாலின் வருகைப் பதிவை உறுதி செய்யுமாறு துணைநிலை ஆளுநர் மற்றும் சபாநாயகருக்கு நீதிமன்றம் வலியுறுத்த வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கபில் மிஸ்ரா. இவர் ஆம் ஆத்மி மூத்த தலைவர் குமார் விஸ்வாஸ்-ன் தீவிர ஆதரவாளர் ஆவார். பின்னர், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதன் பிறகு கெஜ்ரிவால் மீது மிஸ்ரா பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஏற்கனவே அமைச்சர் ஒருவரிடம் கெஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி இருந்தார். இந்த நிலையில், சட்டப்பேரவைக்கு வருவதில்லை என்று கெஜ்ரிவால் மீது கபில் மிஸ்ரா வழக்கு தொடர்ந்துள்ளார்.