ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தம்மை தாக்கியதாக டெல்லி அரசின் தலைமை செயலாளர் புகார் அளித்துள்ளார்.
டெல்லியில் முதலமைமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அரசாங்கத்தின் விளம்பர செலவு அதிகரித்து வருவது தொடர்பாக நேற்று இரவு முதல்-மந்திரி கெஜ்ரிவால் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் கலந்துகொண்டார். அப்போது தலைமைச் செயலாளருக்கும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பிரச்னை தொடர்பாக ஆளுநர் அனில் பைஜாலிடம் புகார் அளித்த அன்ஷு, பிரகாஷ் ஜர்வால் மற்றும் அமானத்துல்லா கான் ஆகிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தன்னை தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி வெளியிட்ட செய்தியில், ‘தலைமை செயலாளர் மீது தாக்குதலோ அல்லது தாக்குதல் முயற்சியோ நடத்தப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பா.ஜ.க.வின் தூண்டுதலின் பேரில் எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார் எனவும் ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தலைமைச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை, தொடர்ந்து பணியாற்றுவோம் ஆனால் வேலை நேரம் தவிர இதர நேரங்களிலும், அலுவலகம் தவிர மற்ற இடங்களிலும் பணி செய்ய மாட்டோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளர் மீது ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் குறித்து ஆளுநர் அனில் பைஜாலிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தாமாக முன்வந்து அறிக்கை கேட்டுள்ளார். மேலும், தங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் உறுதி அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி மீது குற்றம்சாட்டியுள்ளது. ஜனநாயகத்தில் எந்தவொரு பிரச்னையும் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டுமே தவிர வன்முறையை கையாளக் கூடாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
டெல்லியில் 2015-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து கட்சிக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்குமிடையே அதிகாரப் போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.