பூந்தமல்லியில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் அதிக அளவில் உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு. பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்த காணப்படும் நிலையிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகையை கொண்டாடுவதற்காக தமிழக அரசின் சார்பில் கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பூந்தமல்லியிலிருந்து கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, வேலூர், பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. முதல் நாளான இன்று 496 அரசு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.
மேலும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பூந்தமல்லி முக்கிய சாலைகள் முழுவதும் பேருந்துகள் செல்ல வழி இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக நின்று ஆமைப்போல நகரும் சூழல் நிலவியது. அது மட்டுமின்றி சென்னை மாநகர அரசு பேருந்துகளை பஸ் நிலையத்திற்குள் அனுமதிக்காததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பூந்தமல்லி பஸ் நிலையம் மற்றும் வெளிப்புறங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.