ஓமலூரை அடுத்துள்ள தாரமங்கலம் மற்றும் தீவட்டிப்பட்டி காவல்நிலைய பகுதிகளில் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள தாரமங்கலம் மற்றும் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தாரமங்கலம் வட்டார பகுதிகளில் லாட்டரி விற்பனை மிக அதிகமாக செய்யப்படுகிறது. லாட்டரி விற்பனை குறித்து பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. தொடர்ந்து போலீசாரும் அவ்வப்போது ஒருசிலரை கைது செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று நம்பர் லாட்டரி சீட்டு சிறப்பு விற்பனை முகாமை நடத்தியுள்ளனர். தாரமங்கலத்தில் உள்ள பவளத்தானூர் பகுதியில் ஒரு கும்பல் தொடர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல தீவட்டிப்பட்டி காவல்நிலைய எல்லையில் காடையாம்பட்டி, நாச்சினம்பட்டி ஆகிய பகுதிகளில் மூன்று நம்பர் மற்றும் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானிகருக்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளது.
இதைத் தொடர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்ய ஓமலூர் உட்கோட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் பொறுப்பு பாலமுருகன் தலைமையிலான போலீசாரும், தாரமங்கலம் காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த பத்து பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மூன்று நம்பர் லாட்டரி பில் புக்குகள், செல்போன்கள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எங்கெங்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.