ஜெயலலிதாவின் வீட்டில் இருக்கும் சமையல்காரர் ராஜம்மாள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களிடமும் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என ஜெ.தீபா வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையத்தில் இதுவரை திமுக மருத்துவர் அணியை சேர்ந்த மருத்துவர் சரணவன், ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன் உட்பட 27 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இதைதொடர்ந்து சரவணனிடம் நவம்பர் 22, 23-ம் தேதி நீதிபதி விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் விசாரணை ஆணையம் முன்பு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று ஆஜராகினார். அவரிடம் சுமார் மூன்றரை மணி நேரம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். இதுவரை தீபா உள்பட 12 பேரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தியுள்ளார். விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, ஜெயலலிதாவின் வீட்டில் இருக்கும் சமையல் காரர் ராஜம்மாள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களிடமும் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதேபோல், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரும் விசாரிக்கப்பட வேண்டும் என தீபா கோரிக்கை விடுத்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் போயஸ் தோட்டத்தில் இருந்து தனக்கு தனிப்பட்ட முறையில் தகவல்கள் வருவதாகவும் ஜெ.தீபா கூறினார்.