1967-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கி இன்றுவரை கூட்டணி அரசியலுடனே பயணிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும், அதிமுக அல்லது திமுக ஆகிய இரண்டு பிரதான மாநிலக் கட்சிகளுடன் சிறிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. எனவே, ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பும், மாநிலத்தில் கூட்டணி அரசியல் குறித்த விவாதங்கள் மேலோங்கி நிற்கின்றன.
சிறிய கட்சிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களை ஒதுக்கி, அதன்மூலம் வெற்றிக்கனியை பறிப்பது திராவிடக் கட்சிகளின் வழக்கமான நடைமுறை. இரண்டு திராவிட கட்சிகளும் தமிழகம் முழுவதும் பெரிய அளவிலான ஆதரவையும், கணிசமான வாக்கு வங்கியையும் பெற்றிருக்கும்போது, அவை ஏன் கூட்டணியை நாடுகின்றன என்பது மில்லியன் டாலர் கேள்வி. அவர்களால் தனியாக நின்று தேர்தலில் வெற்றி பெற முடியாதா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. சிறிய கட்சிகள் நாம் நினைப்பதை விட அதிக சக்தியை கொண்டிருக்கின்றன என்பதை இதன்மூலம் நம்மால் உணர முடிகிறது.
ஆனால், அதற்கு முன்னர் நாம் இரண்டு முக்கிய சொற்களைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று வாக்கு சதவீதம்; மற்றொன்று போட்டியிடுபவர்களின் வாக்கு சதவீதம்.
வாக்கு சதவீதம் என்பது ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வாக்களிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் ஒரு கட்சி பெறும் வாக்குகளின் சதவீதம். உதாரணமாக, தமிழ்நாட்டில், 234 சட்டப்பேரவை இடங்களில் ஒரு கோடி வாக்காளர்கள் வாக்களித்தால், 25 லட்சம் வாக்குகளைப் பெறும் ஒரு கட்சியின் வாக்கு சதவீதம் 25%. கடந்த 4 தேர்தல்களில் சிறிய மாநிலக்கட்சிகளின் வாக்கு சதவீதமானது அதிகரித்துள்ளது.
மூன்றாவது முன்னணியின் கட்டுக்கதை...
தமிழகத்தில் மூன்றாவது அணி என்பது சாத்தியமில்லாத ஒன்று. இதற்கான உண்மையை கடந்த கால தரவுகள் கொண்டு நம்மால் அறிய முடியும். தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியைப் பற்றி பேசுவது ஒருபோதும் அதிக தேர்வைக் கொண்டிருக்கவில்லை. ஒரு சிறிய கட்சி சட்டப்பேரவையில் அங்கீகாரம் பெற விரும்பினால், அதற்கு குறைந்தபட்ச வாக்குப் பங்கு இருக்க வேண்டும் அல்லது அந்தக் கட்சி, கழகங்களுடன் ஒன்றுசேர வேண்டும்.
கூட்டணி தாக்கம்
மிகக் குறைந்த வாக்குப் பங்குகளைக் கொண்ட சிறிய கட்சிகள், பெரிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில், சீட் ஒதுக்கீடு குறித்து பேசும்போது, அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என பேரம் பேசுவது ஏன் என்ற அப்பாவித்தனமான கேள்வியை பலரும் முன் வைக்கலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒற்றை இலக்க அல்லது பகுதியளவு வாக்குப் பங்குகள் ஒரு சிறிய கட்சியை அளவிட உதவப்போவதில்லை என்று ஒருவர் நினைக்கலாம். தவிர, சிறிய கூட்டணி பங்காளிகளுக்கு அவர்கள் வெற்றியின் பின்னர் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
ஆனால், கடந்த காலங்களில் சிறிய கட்சி அதிக வாக்குகளை அறுவடை செய்ததன் வாயிலாக திராவிட கட்சிகள் பயனடைந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டார். அதில் 29 இடங்களில் வெற்றி பெற்றார். இது திமுகவை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றது என்பதுதான் சுவாரஸ்யம். இதன் விளைவாக, விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் 2016-ம் ஆண்டு தேர்தலில் 136 இடங்களை அதிமுக வென்றது. திமுக 98 இடங்களை கைப்பற்றியது. இதில் அதிமுகவின் வாக்கு சதவீதம் 40.8. திமுக 39.8 வாக்கு சதவீதத்தை பெற்றது. வெறும் 1 சதவீத வித்தியாசத்தின் விளைவாக அதிமுகவுக்கு 38 இடங்கள் அதிகம் கிடைத்தன.
பாமகவின் வெற்றி வியூகம்
தமிழகத் தேர்தலில் கூட்டணி என்பது பிரதான பங்கு வகிக்கிறது. சிறிய கட்சிகள், பெரிய கட்சிகளின் வாக்குகளை பிரித்து விடுகின்றன. உதாரணமாக, கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் பாமக எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து நின்றது. மொத்தம் 23 லட்சம் வாக்குகளைப் பெற்றது. அப்படிப் பார்க்கும்போது, அந்த தேர்தலில் பாமகவின் வாக்கு சதவீதம் 5.36. காரணம், பாமகவை மக்கள் கூட்டணிக்கான கட்சியாகத்தான் பார்க்கிறார்கள். அதுமட்டுமின்றி, 2016 தேர்தலில் 83 தொகுதிகளில் பாமகவுக்கும் பிரதான கட்சிகளான அதிமுக, திமுகவுக்குமான வாக்கு வித்தியாசமானது 'நெக் டு நெக்' என்ற அளவிலேயே இருந்தது. இதன்மூலம் கூட்டணிக்கான முக்கியத்துவத்தையும், அவர்களுக்கான வாக்கு சதவீதத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
2016 தேர்தலில் 83 தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு இடையில் வெற்றி வித்தியாசத்துக்கான வாக்குகளை, பாமக அறுவடை செய்ததன் வாயிலாக கூட்டணி அரசியலின் முக்கியத்துவம் நமக்கு விளங்கும். இதில் 53 தொகுதிகளை அதிமுக கூட்டணியும், 30 தொகுதிகளை திமுகவும் வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால்தான் 2021-ம் ஆண்டு தேர்தலில் கூட்டணியின் ஒரு பகுதியாக பாமகவை தக்கவைத்துள்ளது அதிமுக. காரணம், 53 தொகுதிகளில் அதிக வெற்றி வித்தியாசத்தை பதிவு செய்வதோடு, திமுகவின் 30 தொகுதிகளுக்கு நேரடி சவால்விட முடியும் என அக்கட்சி நம்புகிறது. இதற்கான விலையாகத்தான் 23 இடங்களையும், வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீட்டையும் வழங்கியிருக்கிறது அதிமுக. இந்த 23 இடங்களை பாமகவுக்கு வழங்காவிட்டால், அதிமுக 53 இடங்களை திமுகவிடம் இழக்க நேரிடும்.
உண்மையில், சிறிய கட்சிகளுடனான பெரும்பாலான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒட்டுமொத்த வாக்குப் பங்கைப் பொறுத்தது அல்ல. மாறாக, இந்தக் கட்சிகளின் செல்வாக்கைக் கொண்டு, திராவிடக் கட்சியின் வெற்றி விளிம்பை அதிகரிக்கும் வாக்குகளைப் பெறுவதற்கான அவர்களின் திறனையும் அடிப்படையாகக் கொண்டவை.
- வெங்கடராகவன் ஸ்ரீனிவாசன்
Source: The Federal