வராத 108 ஆம்புலன்ஸ்.. பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் பரிதாப உயிரிழப்பு

வராத 108 ஆம்புலன்ஸ்.. பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் பரிதாப உயிரிழப்பு
வராத 108 ஆம்புலன்ஸ்.. பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் பரிதாப உயிரிழப்பு
Published on

மேலூர் அருகே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக, 108 ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் தனியார் வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு, மேலூர் அரசு மருத்துவமனை முற்றுகையிட்டு மருத்துவர்களுடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பூதமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும், அரிட்டாப்பட்டியைச் சேர்ந்த ஒய்யம்மாள் (25), என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் ஆகிய நிலையில் 3 வயதில் பெண் குழந்தை உள்ளது, இந்நிலையில் இரண்டாவது பிரசவத்திற்காக ஒய்யம்மாள், மேலூர் அருகே தும்பைப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 10.00 மணியளவில் மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது,

இதனையடுத்து ஒய்யம்மாளின் கணவர் கண்ணன் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று குழந்தையை பார்த்ததுடன், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டது குறித்தும், இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்தது குறித்தும் ஒய்யம்மாள் மற்றும் அவரது தாயுடன் தகராறு செய்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் கண்ணன் சென்ற சிறிது நேரத்தில் ஒய்யம்மாளுக்கு இரத்த அழுத்தம் அதிகமாகியதுடன், உதிரப்போக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒய்யமாளை மேல்சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல தும்பைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்து ஒருமணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், உறவினர்கள் மூலம் தனியார் வாகனத்தை ஏற்பாடு செய்து மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஒய்யம்மாளை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்,

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் ஆம்புலன்ஸ் வராத நிலையில், தனியார் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டதால் தான் உயிரிழந்ததாகக் கூறி மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், மேலும் இறந்த பெண்ணின் உடலை உடற்கூராய்விற்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ஒய்யம்மாள் இறந்தது குறித்து தகவல் அறிந்து மேலூர் மருத்துவமனைக்கு வந்த கண்ணனை, நீங்கள் திட்டியதாலேயே உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஒய்யம்மாள் இறந்ததாகக் கூறி உறவினர்கள் கண்ணனை மருத்துவமனை சாலையில் ஓட ஓட விரட்டி கடுமையாக தாக்கினர், இதுகுறித்து தகவல் அறிந்து அங்கே வந்த மேலூர் காவல்துறையினர், உறவினர்களிடமிருந்து கண்ணனை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மேலும், மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒய்யம்மாளின் உடலை உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக ஒய்யமாளுக்கு சிகிச்சை அளித்த, தும்பைபட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரையும், விசாரணைக்காக காவல்த்துறையினர் அழைத்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com