காவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பைக் கருணாநிதி பெற்றுக்கொடுத்தார் என்று எப்படி? கூறமுடியும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், “டிடிவி தினகரனுக்கு ஞாபக மறதி அதிகம். தர்மயுத்தம் ஆரம்பித்த போதே அதற்கான பதிலை தினகரனுக்கு அளித்துள்ளேன். ஜெயலலிதா இறந்த நேரத்தில் என்னை பதவி ஏற்க சொன்ன போது மறுத்தேன். என்னை கட்டாயபடுத்தி முதல்வர் பதவியை ஏற்க வைத்தனர். வேறு யாரும் முதல்வரானால் ஆட்சிக்குள்ளும், கட்சிக்குள்ளும் பிரச்சனை வரும். ஆட்சி மற்றும் கட்சிக்கு உறுதுணையாக இருக்க என்னை முதல்வர் பதவியை ஏற்க வற்புறுத்தியதால்தான் அந்தச் சமயத்தில் பதவி ஏற்றுக்கொண்டேன். பொறுப்பை உணர்ந்து, நிர்வாகத்தை சரியாக நடத்த வேண்டுமென்ற எண்ணாத்தோடு வந்தேன். அப்போது பல பிரச்சனைகள் ஏற்பட்டது ஜல்லிக்கட்டு போராட்டம், சென்னை குடிநீருக்காக ஆந்திர முதல்வரை சந்தித்து கிருஷ்ணா நதிநீர் பெற்று தந்தது, வர்தா புயலில் அதிகாரிகளுடன் இணைந்து சிறப்பாக தனது தலைமையிலான அரசு செயல்பட்டது. இதனால்தான் அவர்களது மனது மாறி என்னை பதவியிலிருந்து விலகவைக்க நெருக்கடி கொடுத்தனர்.
மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவர் என்பதை நினைவூட்டுங்கள். அவர் கனவுலகில் சஞ்சரித்து கொண்டு இருக்கின்றார். கமல்ஹாசனை அதிமுக கூட்டணிக்கு அழைப்பது குறித்து, தேர்தல் நேரத்தில் பார்ப்போம். காவிரி பிரச்சனையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டது. நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறவில்லை. எனக்கு வந்த பிரச்சனை போல் வேறு யாருக்கு வந்து இருந்தாலும் கண்டிப்பாக தற்கொலை செய்திருப்பார் என்றுதான் கூறினேன். காவிரி பிரச்னையில் ஜெயலலிதா சட்டபோராட்டம் நடத்தி இறுதித் தீர்ப்பை பெற்று கொடுத்தார். அதனால்தான் இந்தப் பிரச்சனை ஓரளவிற்கு தீர்ந்துள்ளது. அதை எப்படி கருணாநிதி பெற்றுகொடுத்தார் எனக் கூற முடியும்” என்றார்.