மகளின் திருமணத்தை மீறிய உறவால் தந்தை தற்கொலை.. அலட்சியத்தால் பறிபோன உயிர்

மகளின் திருமணத்தை மீறிய உறவால் தந்தை தற்கொலை.. அலட்சியத்தால் பறிபோன உயிர்
மகளின் திருமணத்தை மீறிய உறவால் தந்தை தற்கொலை.. அலட்சியத்தால் பறிபோன உயிர்
Published on

கீழ்நாரியப்பனூர் கிராமத்தில் திருமணத்தை மீறிய உறவால் பறிப்போன உயிர் - காவல்துறையினரின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நாரியப்பனூரை சேர்ந்தவர் முருகேசனின் மகள் சரண்யா. நர்சிங் படித்துள்ள இவர் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான சித்தப்பா மணிகண்டன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே திருமணத்தை மீறிய மாறியுள்ளது. இதுபற்றி அறிந்த சரண்யாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். அவன் உனக்கு சித்தப்பா முறை வேண்டும் இது தவறு என்று உறவினர்களும் கண்டித்துள்ளனர். இருப்பினும் அவர் தனது உறவை தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் சரண்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மணிகண்டனுடன் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்றுவிட்டார். இது குறித்து சரண்யாவின் குடும்பத்தினர் வரஞ்சரம் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் அதற்கு மாறாக சரண்யாவின் குடும்பத்தார் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த மணிகண்டனின் முதல் மனைவி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சரண்யாவை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து சரண்யா தனது அத்தை வீட்டில் தங்கியிருந்த நிலையில், ’என்னை மணிகண்டன் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றுவிட்டார். அவருக்கு ஏற்கெனவே ஒரு மனைவி உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அப்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த மணிகண்டனுடன், சரண்யா மீண்டும் ஓட்டம் பிடித்ததாக தெரிகிறது. மணிகண்டனுடன் தனது மகள் சரண்யா ஒடியதால் முருகேசன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

மணிகண்டன்-சரண்யாவுடன் எடுத்த புகைப்படங்களை முருகேசனுக்கு அனுப்பி வைத்தும் தொலைபேசியில் தொடர்புகொண்டு தகாத வார்த்தைகளில் தொடர்ந்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த முருகேசன் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணத்தை மீறிய உறவால் வீட்டைவிட்டு ஒடிய மகளால் மனவேதனை அடைந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சரண்யாவின் தந்தை முருகேசன், மணிகண்டன் மீது அளித்த புகாரில் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்காமல் முருகேசன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து சித்திரவதை செய்துள்ளனர்.

3 மாதங்களுக்கு முன்பு தங்களின் புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து இருந்தால் இன்று இப்படி ஒரு உயிரை இழந்து இருக்க மாட்டோம் என முருகேசனின் சகோதரர் வேதனையுடன் தெரிவித்தார். வரஞ்சரம் காவல்நிலையத்தில் வழக்கு கொடுத்து நடவடிக்கை எடுக்காமல் அதற்கு மாறாக பொய்வழக்கு போட்டு எங்கள் மீது நடவடிக்கை எடுத்த உதவி காவல் ஆய்வாளர் ஜம்புலிங்கம் மீதும், சரண்யாவை அழைத்து சென்ற மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தற்கொலை செய்து கொண்ட முருகேசனின் உறவினர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com