புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெண்கள் வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்த போது சினிமா பாடல் ஒன்று ஒலிக்கவே அதனைக் கேட்ட உற்சாகத்தில் இரு பெண்கள் மற்றும் ஒரு முதியவர் மெய்மறந்து அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்றார்போல் நடனமாடிய காட்சி காண்போரை ரசிக்க வைத்துள்ளது
கிராமப்புறங்களில் பெண்கள் வயல்களில் நாற்று நடும்போது களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புற பாடல்களை பாடியவாறு நாற்று நடும் பணிகளில் ஈடுபடுவது வழக்கம். இதுபோன்று நாட்டுப்புற பாடல்களை பாடிக்கொண்டே நடவு வேலைகளை பார்க்கும்போது உடல்வலி மறந்து உற்சாகத்தோடு வேலையை பார்க்கலாம். இதனால் தொன்றுதொட்டு இன்றளவும் பல்வேறு கிராமங்களில் பெண்கள் இந்த நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதையும் தாண்டி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மழையூர் கிராமத்து வயல்வெளியில் நடவுபணி நடந்து கொண்டிருந்த. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரில் சினிமா பாடல் ஒன்று ஒலிக்கவே மெய்மறந்த பெண்களோடு முதியவர் ஒருவர் பாடல் வரிகளுக்கு ஏற்ப நடனமாடிய காட்சி காண்போரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.
அதில் இரு பெண்கள் தலையில் நாற்றுக்களை கரகம் போல் வைத்துக்கொண்டு அந்தப் பாடலுக்கு ஏற்றவாறு உடல்களை வளைத்து நடனம் ஆடுகின்றனர். அவர்களின் ஆட்டத்தை பார்த்து நடவு பணியில் ஈடுபட்டிருந்த முதியவர், தானும் சேர்ந்து அந்த பெண்களோடு உற்சாகத்தோடு மெய்மறந்து நடனமாடுகிறார். அவர்களின் நடனத்தை பார்த்தவாரே மற்ற பெண்கள் உற்சாகத்தோடு நாற்று நடும் பணிகளில் ஈடுபடுன்றனர்.
இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவிவருகிறது.