மூன்றாவது அணி முதல்... எதிர்க்கட்சிகள் கூட்டணி வரை - பலன் தருமா காங்கிரஸ் வியூகம்?

மூன்றாவது அணி முதல்... எதிர்க்கட்சிகள் கூட்டணி வரை - பலன் தருமா காங்கிரஸ் வியூகம்?
மூன்றாவது அணி முதல்... எதிர்க்கட்சிகள் கூட்டணி வரை - பலன் தருமா காங்கிரஸ் வியூகம்?
Published on

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதாவை வீழ்த்த வியூகம் அமைப்பது தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. 

காங்கிரஸ், பாஜக அல்லாத அணி

ஒவ்வொரு முறை மக்களவை தேர்தல் நெருங்கும் போதும், அதற்கு ஓராண்டிற்கு முன்பாக அணிகள் உருவாவது தொடர்பாக பேச்சுகள் அடிபட தொடங்கும். இந்த வருடமும் தொடக்கத்தில் மூன்றாவது அணி குறித்த பேச்சுகள் தான் முதலில் அடிபட்டது. இந்த முயற்சியை தீவிரமாக கையில் எடுத்தவர் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. அவருக்கு அடுத்து தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ்.

காங்கிரஸ், பாஜக அல்லாத அணி என்பதே அவர்கள் கருத்தாக இருந்தது. அந்த நேரத்தில் மம்தா பானர்ஜி பல்வேறு அரசியல் தலைவர்கள் சந்தித்து உரையாடி வந்தார். மூன்றாவது அணி குறித்த பேச்சில் திமுக தலைவர் ஸ்டாலின் பெயரும் அடிபட்டது. சந்திரசேகர் ராவ் சென்னை வந்து ஸ்டாலினை சந்தித்தது, மம்தா பானர்ஜி ஸ்டலினுடன் போனில் பேசியது, முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவிற்கு முதல் நபராக மம்தா வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது அணியா? பாஜக ஆதரவு அணியா?

ஆனால், மூன்றாவது அணி பாஜகவின் பி டீம் என்ற விமர்சனங்கள் காங்கிரஸ் கட்சியால் முன் வைக்கப்பட்டது. மூன்றாவது அணி பாஜகவுக்கு சாதகமாக முடிந்துவிடும் என்ற கருத்துக்கள் எழுந்ததால் அந்த பேச்சுகள் மெல்ல குறைந்தது. பின்னர் இல்லாமலே போனது. கடந்த முறையைப் போல் மூன்றாவது அணிக்காக முயற்சிகள் நடைபெற்று தோல்வியில் முடிந்தன. பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் மம்தா உறுதியாக இருந்தார். அதனால், காங்கிரஸ் பக்கம் தனது கவனத்தை அவர் செலுத்த தொடங்கினார். இடையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா கந்தியை நேரில் சந்தித்து பேசினார்.

விழித்துக் கொண்ட காங்கிரஸ்..

மூன்றாவது அணி குறித்த பேச்சுகள் தீவிரமாக முன் வைக்கப்பட்டு வந்த நிலையில், காங்கிரஸ் கட்சி விழித்துக் கொண்டது. பாஜகவுக்கு எதிராக வலுவான  எதிர்க்கட்சிகளின் கூட்டு முக்கியம் என்ற எண்ணத்திற்கு வந்தது காங்கிரஸ். கர்நாடக சட்டசபை தேர்தல்தான் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது காங்கிரஸ்.

குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்ச்சிதான் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கான முதல் அச்சாரமாக அமைந்தது எனலாம். பதவியேற்பு விழா படங்களை பார்த்தாலே தெரியும். பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாயாவதி, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, ராகுல் காந்தி, சோனியா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி, அகிலேஷ் யாதவ், டி.ராஜா, தேஜஷ்வி யாதவ் உள்ளிட்டோர் அடங்கிய அணிதான் பாஜகவுக்கு எதிரான கூட்டணியாக மாறுவார்கள் என்று அப்பொழுதே கணிக்கப்பட்டது.

மாயாவதி - காங்கிரஸ் உரசல்

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு மாயாவதி ஆதரவு தெரிவித்தார். இதனால், சமாஜ்வாடி அபார வெற்றி பெற்றது. இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், முதல்வர், துணை முதல்வரின் முன்னாள் தொகுதிகளில் ஆளும் தோல்விதான். சமாஜ்வாடி கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளதால், அந்த தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மாயவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே கூட்டணி பற்றிய பேச்சு அடிபட்டது.

ஆனால், மக்களவை தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில தேர்தல்களில் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற நிபந்தையை மாயாவதி முன் வைத்தார். ஆனால், தொகுதி உடன்பாடு எட்டாத நிலையில், மாயாவதி தனித்தே போட்டியிட்டார். இதனால், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் - மாயாவதி கூட்டணி சாத்தியமா? என்ற கேள்வியும் எழுந்தது.  

புயலாய் கிளம்பிய சந்திரபாபு நாயுடு

உண்மையில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை சொற்பமாகிவிட்டது. தன் வசம் வைத்திருந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் தோல்விகளால் இழந்துவருகிறது காங்கிரஸ். அதனால், அடுத்து வரும் மக்களவை தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் அது இருக்கிறது. 

அப்படி இருக்கையில், சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் திடீரென தீவிரமானார். பல்வேறு மாநிலங்களின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வந்தார். பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சந்திரபாபு நாயுடு, அக்கட்சிக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்தார். அப்போது, நாட்டின் பாதுகாப்புக்காகவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும்தான் இப்படியாக கூட்டணிய அமைக்க வேண்டிய தேவை உள்ளது என்று இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது கூறினர். திமுக தலைவர் ஸ்டாலினையும் சென்னை வந்து சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.

விவசாயிகள் போராட்டத்தில் ஒன்றுக் கூடிய எதிர்க்கட்சிகள்

நாடு முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இணைந்து அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பின் பேரில் டெல்லியில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் திரண்டனர். பயிர்க்கடன் தள்ளுபடி,‌ விளைபொருட்களுக்கு உரிய விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சீதாராம் யெச்சூரி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், ஃபரூக் அப்துல்லா, சரத் யாதவ், சரத் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

நாளை தேர்தல் முடிவுகள்..இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, செமி பைனலாக கருதப்படும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதாவை வீழ்த்த வியூகம் அமைப்பது தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. 

எந்தெந்த கட்சிகள்..தலைவர்கள் பங்கேற்கிறார்கள்

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பங்கேற்கின்றன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

இடதுசாரி தலைவர்கள் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சரத் யாதவ், லாலுவின் மகன் தேஜஸ்வி பிரசாத் ஆகியோரும் டெல்லி கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர். சந்திரபாபு நாயுடு கடந்த சில மாதங்களாக மேற்கொண்ட முயற்சிகளின் பலனே இந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் என்று சொல்லலாம். தேர்தல் முடிவுகளுக்கு பின்னால், நிலைமை எப்படி மாறுமோ என்ற எண்ணத்தை இந்தக் கூட்டம் முன் கூட்டியே நடத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. 

எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் மற்றொரு முக்கியத்துவம்

எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உள்ளது. நாளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் எந்தமாதிரியான விஷயங்களை எழுப்பலாம் என்பது குறித்தும் இன்று நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, அரசியலுக்காக வருவான வரித்துறை, அமலாக்காத் துறை பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டை எழுப்பலாம். 

முதல் முறையாக பங்கேற்கும் கெஜ்ரிவால்

கூட்டணி அமைப்பது தொடர்பான பல்வேறு கூட்டங்களை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்து வந்தார். முதல் முறையாக பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். அதற்கு முக்கிய காரணம் சந்திரபாபு நாயுடுதான். கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து அழைப்புவிடுத்தார். 

மாயாவதி பங்கேற்கவில்லை

பிஜு ஜனதா தளத் தலைவரும் ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவருமான சந்திரசேகர ராவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிய வந்துள்ளது. மாயாவதிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் ஏற்கனவே முரண்பாடு நிலவி வந்தநிலையில், அவர் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

பாஜகவின் ஒற்றைக் கேள்வி

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைக்கும் முயற்சிகள் குறித்து பாஜக ஒன்றும் பெரிதாக கவலை கொண்டதாக தெரியவில்லை. பாஜக முன் வைத்த ஒரே கேள்வி இதுதான். எங்கள் பக்கம் ‘நரேந்திர மோடி’ பிரதமர் வேட்பாளராக உள்ளார். உங்கள் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லுங்கள் என்ற கேள்வியை மட்டும் திரும்ப திரும்ப பாஜக முன் வைத்து வருகிறது. 

புதிய தொடக்கமாக அமையும் எதிர்க்கட்சிகள் கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டும் முழுமையாக உள்ள நிலையில், இந்தக் கூட்டத்தை முக்கியமான முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கான தன்னுடைய பயணத்தை இந்தக் கூட்டத்தொடரில் இருந்து காங்கிரஸ் தொடங்கும் என்று நம்பப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com