தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்த மாற்றி அமைக்கப்பட்ட பிரமாண பத்திரத்திற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அரசியலில் குற்றப்பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும், இதனை தடுப்பதற்கு தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு தடை விதிக்கக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறுவோர், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாது என சட்டம் இருந்தாலும், கிரிமினல் குற்றப்பின்னணி கொண்டவர்கள் எண்ணிக்கை அரசியலில் அதிகரித்து வருவதால், இந்த சட்டத்தை மேலும் வலிமையாக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
அப்போது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே வேட்பாளர்கள் போட்டியிடுவதை தடுக்க உத்தரவிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு இல்லை என்றும், நாடாளுமன்றம்தான் இதுகுறித்து உரிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும், சில நிபந்தனைகளையும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதாவது, வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை ஊடகங்களில் தெரியப்படுத்த வேண்டும், அதன்பின்னர் மக்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.
செப்டம்பர் 25ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் பிரமாண பத்திரம் 26-ன் வடிவத்தை மாற்றி அமைத்தது. அதன்படி, பிரமாண பத்திரத்தில் பதிவு செய்த நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை அச்சு மற்றும் ஆடியோ-வீடியோ ஊடகங்களில் வெளியிட வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் குறைந்த பட்சம் மூன்று முறை இந்த தகவலை வெளியிட்டிருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் என்னமாதிரியான வேட்பாளர்களை களமிறக்குகிறார்கள் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதே இதன் நோக்கம். மாற்றி அமைக்கப்பட்ட பிரமாண பத்திரத்தை சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்திருந்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்த மாற்றி அமைக்கப்பட்ட பிரமாண பத்திரத்திற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, வேட்பாளர்கள் மீதான நிலுவையில் உள்ள குற்றவழக்குகள் உள்ளூரில் அதிக அளவில் விற்பனையாகும் செய்திதாள்களில் பிரசுரம் செய்ய வேண்டும். அந்த பிரசுரத்தின் எழுத்தின் அளவு 12-க்கு குறையாமல் இருக்க வேண்டும்.
நிபந்தனைகள் விவரம்:-
வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளில் இருந்து, வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரம் முன்பாக இந்த குற்றப்பின்னணி அறிவிப்பு இருக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகள் படி குற்றப்பின்னணி விவரங்களை எப்படி வெளியிட வேண்டும் என்று வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரிகள் (returning officer) தெரிவிக்க வேண்டும்.
ஊடகங்களில் குற்றப்பின்னணி விவரங்கள் வெளியிட்டதற்கான ஆவணங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் செலவு கணக்குகளுடன் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும்.
அரசியல் கட்சிகளும் தாங்கள் நிறுத்தும் வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரங்களை தங்களது கட்சியின் இணையதளம், டிவி, செய்திகாள்களில் வெளியிட வேண்டும்.
மேற்கண்ட நிபந்தனைகள் அனைத்து வருகின்ற ஐந்து மாநில தேர்தல்களில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.
Courtesy: TheTimesOfIndia