விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதில் மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைக்கு இணங்க மாணவிகளிடம் அவர் வலியுறுத்துவதாகவும், இதன் மூலம் பணம் கிடைக்கும் என்பன உள்ளிட்ட ஆசைகளையும் பேராசிரியர் பேசியிருந்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த, மாணவிகளை தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படும் பேராசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, இன்று மாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த விவகராத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது சந்தேகம் இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் " பேராசிரியரின் பேச்சு இளம் பெண்களுடன் அவர் முதல் முறையாகப் பேசுவதாகவோ, இந்த இளம் பெண்களிடம் முயற்சிப்பதுதான் முதல் தடவை என்பதாகவோ புரிந்துகொள்ள முடியவில்லை. மிக மிக உயர் பதவிகளில் உள்ளோர், கவர்னர் தாத்தா இல்லை, ஆளுநரை அருகிலிருந்து வீடியோ எடுத்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து ஆளுநர், அவரது அலுவலகம் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் இதில் தொடர்பு இருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகம் ஏற்படுகிறது. நிர்மலா தேவி கருவியாக செயல்பட்டிருக்கிறார். அவரை பின்னிருந்து இயக்கியவர்கள் உயர் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு உள்ளவர்களாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு.
தென் மாநில ஆளுநர் ஒருவர் பாலியல் புகார்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும், அதுகுறித்து உள்துறை அமைச்சகம் விசாரித்துக் கொண்டிருப்பதாகவும், சில வாரங்களுக்கு முன்னர் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்தால் 'தகுதி, திறமையைத் தாண்டி' முறைகேடான கைமாறுகளுக்காக இவை நடக்கிறதோ என்கிற சந்தேகமும், கவலையும் எழுவது இயல்பே. நிர்மலா தேவியின் ஒலிக்கோப்பு மற்றும் நியமனங்கள் குறித்த அவருடைய பேச்சுக்கள் குறித்து குற்றவியல் வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் தன் வழக்காக எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும். இத்தகைய விசாரணை முறையாக நடைபெற வேண்டுமெனில் சந்தேகத்திற்கு ஆளாகியுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும். விசாரணை முடியும் வரையில் இந்த ஆளுனரால் நியமிக்கப்பட்ட துணை வேந்தர்களையும், உயர்கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளையும் பணியிலிருந்து விலக்கிவைக்க வேண்டுமெனவும், தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.