இந்தத் தேர்தலில் குடும்ப அரசியல் முக்கிய பிரச்னையாக இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறினார்.
மக்களவைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த 11 ஆம் தேதி நடந்தது. இதில் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது. 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ரமணகரா பகுதி வாக்குச்சாவடியில் தனது மனைவி அனிதா, மகனும் மாண்ட்யா தொகுதி வேட்பாளருமான நிகில் ஆகியோருடன், அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இந்த தேர்தலில் குடும்ப அரசியல் முக்கிய பிரச்னையாக இல்லை. நாட்டின் பிரச்னைகள்தான் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. குடும்ப அரசியல் காரணமாக பல மாநிலங்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. பாஜகவின் விமர்சனங்கள் பற்றி கவலையில்லை’’ என்றார்.