விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உண்ண உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வாட்ஸ்அப் மூலம் குழு அமைத்து 50 நாட்களுக்கு மேலாக தன்னார்வலர்கள் உதவி வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தளர்வுகளுடன் ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர், வாட்ஸ்அப் மூலம் குழு அமைத்து அதில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தங்களால் இயன்ற பொருளுதவி செய்து பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், உணவிற்கு வழியில்லாமல் தவிப்பவர்கள் என நாளொன்றுக்கு சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு 50 நாட்களுக்கும் மேலாக உணவு வழங்கி வருகின்றனர்.