திருத்தணி அடுத்த மத்தூர் கிராமத்தில் ஒரே தெருவை சேர்ந்த 13 பேருக்கு கடந்த நான்கு நாட்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. திருத்தணி சுற்றுவட்டார பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது. 5ஆம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பின்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் அப்பகுதியில் டாஸ்மாக் உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகின்றன.
இதனால் நோய் தொற்று இல்லாமல் இருந்த திருத்தணியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருத்தணி அடுத்த மத்தூர் கிராமத்தில் ஒரே தெருவை சேர்ந்த 13 பேருக்கு கடந்த நான்கு நாட்களில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகளால் பொதுமக்கள் அதிகளவில் நடமாடுவதால் நோய் தொற்று மேலும் அதிகளவில் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே திருத்தணி சுற்றுவட்டார இடங்களிலும் முழு ஊரடங்கை அமல்படுத்தி நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.