விஜயகாந்த் காலில் அரசியல் கட்சித் தலைவர்கள் விழுவது போன்று கார்ட்டூனை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துவிட்டு, டெலிட் செய்துள்ளார் எல்.கே சுதீஷ்.
தேமுதிக துணை செயலாளரான எல்.கே சுதீஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் காலில் மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் விழுவதுபோல அந்த கார்ட்டூன் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
முன்னதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறும்போது, ''தமிழகத்தில் இரு பெரிய தலைவர்கள் இல்லாததால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தங்களின் பலத்தைத் தெரிவிப்பதில் அனைத்து கட்சியினருக்கும் சிரமமாக இருக்கும். இரு பெரும் தலைவர்கள் இருக்கும்போதே கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றவர் விஜயகாந்த்.
எனவே அந்தத் தலைவர்களின் வெற்றிடத்தை விஜயகாந்த் மட்டுமே நிரப்புவார். அதற்கு உண்டான தகுதி அவருக்கு மட்டுமே உள்ளது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்கவே தொண்டர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற பின்பு விஜயகாந்த் அதுதொடர்பாக அறிவிப்பார்'' என்றார்.
இந்த நிலையில் சுதீஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விஜயகாந்த் காலில் மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் விழுவது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே அந்த கார்ட்டூனை சுதீஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.