வாடிக்கையாளரிடமிருந்து அதிக கட்டணம் வசூலித்ததற்காக ஓலா கேப்ஸ் நிறுவனத்திற்கு 95 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது ஐதராபாத் நுகர்வோர் நீதிமன்றம்.
ஜபேஸ் சாமுவேல் என்ற வாடிக்கையாளர் ஒருவர் தனது மனைவி மற்றும் அசிஸ்டண்ட் உடன் வெளியே செல்வதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஓலா செயலி மூலம் கேப் புக் செய்திருக்கிறார். அப்போது சென்றடைய வேண்டிய லோகேஷன் வருவதற்கு முன்பே பாதி வழியில் அந்த ஓலா கேப் டிரைவர் இறக்கி விட்டிருகிறார். கேபில் வந்த போது ஏசியும் போட விடாமல் முரட்டுத்தனமாகவும் அந்த டிரைவர் நடந்திருக்கிறார்.
4 மணிநேரத்திற்கு கேப் புக் செய்திருந்த போதும், பாதி வழியில் இறக்கிவிட்டு 861 ரூபாய் கட்டணமும் கொடுக்கும்படி அந்த டிரைவர் கேட்டிருக்கிறார். இதனால் கடுமையான அதிருப்திக்கு கோபத்திற்கும் ஜபேஸ் சாமுவேல் ஆளாகி இது குறித்து ஓலா நிறுவனத்துக்கு மெயில் மூலம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
மேலும் கஸ்டமர் கேர் எண்ணில் இருந்து அழைத்த போதும் ஓலாவின் உயர் அதிகாரிகள் எவரும் பேசவில்லை. கடந்த ஜனவரி மாதத்தன்று 861 ரூபாயை ஜபேஸ் சாமுவேல் கட்டியிருக்கிறார். இதனையடுத்து ஐதராபாத் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஜபேஸ் சாமுவேல்.
அதில், ஓலா நிறுவனத்தின் அலட்சியத்தால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதால் இழப்பீடாக 4 லட்சத்து 99 ஆயிரம் கொடுக்க உத்தரவிடுமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனை விசாரித்த கன்ஸ்யூமர் கோர்ட், 861 ரூபாய்க்கு 21% வட்டியுடன் 88 ஆயிரம் வழக்குக்கு செலவிடப்பட்ட ரூபாயும், 7 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து கொடுக்கும்படி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.