பாஜகவில் இணைந்தார் காங். மூத்த தலைவர் டாம் வடக்கன்
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டாம் வடக்கன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. இருப்பினும், சில மாதங்களுக்கு முன்பு இருந்தே, தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை வேகமாக நடைபெற்று வந்தது. தேர்தலை மனதில் கொண்டு எல்லா கட்சிகளும் பணியாற்றி வருகின்றன. தேதி அறிவிப்பதற்கு முன்பு இருந்தே, ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தலைவர்கள் தாவும் நிகழ்வுகள் தொடங்கி விட்டன. சமீபத்தில் குஜராத்தில் சில காங்கிரஸ் எம்.எல்.ஏகள், பாஜகவில் இணைந்தனர். அதேபோல், சில பாஜக தலைவர்கள் காங்கிரஸில் இணைந்தனர். இதில், பாஜகவில் சேரும் தலைவர்களின் எண்ணிக்கைதான் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் டாம் வடக்கன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். புல்வாமா தாக்குதலில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தமக்கு அதிருப்தி அளித்ததால் காங்கிரசில் இருந்து விலகியதாக டாம் வடக்கன் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் முன்னேற்றத்துக்கு எடுத்துவரும் நடவடிக்கைகளில் தமக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாக டாம் வடக்கன் தெரிவித்தார். இதேபோல திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ அர்ஜுன் சிங் பாஜகவில் இணைந்தார்.