எம்எல்ஏ பேரத்தில் பாஜக ஆஃபர்கள் இதெல்லாமா? - காங்கிரஸ் வெளியிட்ட ஆடியோ
கர்நாடகாவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் ஜனார்தன் ரெட்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஒலிப்பதிவு வெளியிடப்பட்டுள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள், இந்த ஒலிப்பதிவை வெளியிட்டனர்.
நாளை மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது பாஜகவிடம் 104 தொகுதிகள் மட்டுமே உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 112 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. தனக்கு தேவைப்படும் 8 எம்.எல்.ஏக்கள் ஆதரவை காங்கிரஸ் அல்லது மஜதவிடம் இருந்து பெற வேண்டிய நிலையில் பாஜக உள்ளது. இதனால், தங்கள் எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் பொருட்டு காங்கிரஸ்-மஜத தலைமை அவர்களை ஐதராபாத்தில் தங்க வைத்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏவிடம் ரூ.150 கோடி பேரம் பேசிய ஆடியோவை ஊடகங்களின் முன்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில், ஜனார்தன் ரெட்டி ராய்ச்சூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு அமைச்சர் பதவியையும் வழங்குவதாக ஒலிப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா தேசிய தலைவர்களை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்றும், 100 மடங்கு வளர்ச்சி இருக்கும் என்றும் ஆடியோவில் கூறப்பட்டுள்ளது. மேலும், “என்ன வேண்டும் என்று சொல்லுங்கள். உங்களை பாரதிய ஜனதா தேசியத்தலைவர் அமித்ஷாவிடம் அறிமுகப்படுத்துகிறேன் அவரிடமே நேரடியாக பேசுங்கள். என்ன பதவி வேண்டும் என்று சொல்லுங்கள். எவ்வளவு பணம் தேவை என்று நினைக்கிறீர்களோ அந்த அளவு பணத்தை கேளுங்கள்” என்றும் அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது.
எடியூரப்பா ஆட்சியில் அமைச்சராக இருந்த ஜனார்த்தன ரெட்டி கனிமவள முறைகேடு வழக்கில் சிக்கி தற்போது ஜாமீனில் உள்ளார். ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர் சோமசேகர ரெட்டி பெல்லாரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ரெட்டி சகோதரர்கள் பாஜகவுக்கு பண ரீதியாக பக்க பலமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.