மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வருகிறது. அங்கு மங்கோலி மற்றும் கொலாரஸ் ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காலமானதைத் தொடர்ந்து அதற்கான இடைத்தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், மங்கோலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரிஜிந்த்ரா சிங் யாதவ் 2,124 வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பாய் சாஹப் தேஸ்ராஜ் சிங் யாதவை தோற்கடித்தார். அதேபோல், கொலாரஸ் தொகுதியில் பாஜக வேட்பாளர் தேவேந்திர குமார் ஜெயினை விட காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திர சிங் யாதவ் 8,083 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலின் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கென ராஜஸ்தானில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் வசம் இருந்த தொகுதிகளையே காங்கிரஸ் கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “திமிர்பிடித்த தவறான ஆட்சியின் மீது கிடைத்த வெற்றி இது. மேலும் நம்பிக்கை அளித்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் தேர்தல் முடிவுகள் மாற்றத்தின் காற்று வீசுவதை காட்டுகிறது” என்றார்.
2019 ஆம் ஆண்டுக்கு முன்பாக நடைபெறும் ஒவ்வொரு தேர்தலும் உற்று நோக்கப்பட்டு வருகிறது. இரண்டு கட்சிகளும் மக்களவை தேர்தலுக்கு தொண்டர்களை உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். அடுத்தது, திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கு நடைபெற்றுள்ள தேர்தலுக்கான முடிவுகள் மார்ச் 3 ஆம் தேதி தெரிய வரும். அதேபோல், அடுத்ததாக கர்நாடக மாநிலத்திற்கு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம் மாநிலத்திற்கும், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக ராஜஸ்தான் மாநிலத்திலும் தேர்தல்கள் நடைபெறவுள்ளது. இதில், கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கான தேர்தல்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. தொடர்ச்சியான வெற்றிகள் காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இருப்பினும், 3 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமான இருக்கும் என்றே கருத்து கணிப்புகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.