நாங்குநேரி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராகியுள்ள ரூபி மனோகரன் பின்னணி குறித்த சில விவரங்கள் வெளியாகியுள்ளன.
கன்னியாகுமரி தொகுதியில் எம்பியாக வெற்றி பெற்ற வசந்தகுமார், தனது நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்தத் தொகுதி காலியானது. இதேபோல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ராதாமணி காலமானதால் அந்தத் தொகுதியும் காலியானது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விண்ணப்பித்த அக்கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல் நடைபெற்றது. அதனையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதலுடன் அகில இந்தியச் செயலர் முகுல் வாஸ்னிக் இதற்கான அறிவிப்பிணை வெளியிட்டுள்ளார்.
அதில், ரூபி மனோகரன் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் ஆகியோரைச் சந்தித்து ரூபி மனோகரன் வாழ்த்துப் பெற்றார்.
யார் இந்த ரூபி மனோகரன்?
கட்டுமானத் துறையில் ஆர்வம் கொண்ட 60 வயதாகும் ரூபி மனோகரன், ரூபி பில்டர்ஸ் குழுமத்தைத் தொடங்கியவர். முன்னாள் விமானப் படை அதிகாரியான இவரது கட்டுமான நிறுவனம் 22 ஆண்டுகளில்185 குடியிருப்புகளுக்கு மேல் கட்டியுள்ளது. விமான நிலைய ஆணையத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் ரூபி மனோகரன் பணியாற்றியுள்ளார்.
நீங்களும் பில்டர் ஆகலாம் என்ற புத்தகத்தை எழுதியுள்ள ரூபி மனோகரன், கட்டுமானத் துறையில் பல்வேறு விருதுகளையும் பெற்றவர். கன்னியாகுமரி மாவட்டம் குன்னத்தூரில் பள்ளியையும் நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவராக இருக்கும் ரூபி மனோகரன், லயன்ஸ் கிளப்பிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.