முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் செய்த தவறுகளால் பாஜகவிடம் அதிமுக தலைகுனிந்து நிற்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
சேலம் - சீலநாயக்கன்பட்டியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, வைகோ, திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், காதர் மொய்தீன் உள்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய ராகுல், இப்போது இருப்பது பழைய அதிமுக அல்ல என்றும் கூறினார்.
ராகுல் காந்தி பேசுகையில், “இது பழைய அதிமுக என்று யாரும் நம்ப வேண்டாம். இப்போது இருக்கும் அதிமுக மாஸ்க் அணிந்துள்ளது. மாஸ்கை கழற்றினால் அது அதிமுக அல்ல பாஜக என்பது தெரியவரும். பழைய அதிமுக என்பது முடிந்துவிட்டது. இப்போது இருக்கும் அதிமுக பாஜகவால் இயக்கப்படும் அமைப்பாக உள்ளது.
தமிழக மக்கள் மாஸ்க் பின்னால் என்ன இருக்கிறது, ஏன் இந்த மாஸ்க் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு தமிழர் கூட மோடிக்கு முன்னால் தலைகுனிந்து நிற்பதை விரும்புவது இல்லை” என்றார்.