தேசிய கீதத்தில் உள்ள ‘சிந்த்’ என்ற வார்த்தையை திருத்தம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி எம்.பி ரிபின் போரா தனி நபர் தீர்மானமாக இதனை கொண்டு வந்துள்ளார். ‘சிந்த்’ என்ற வார்த்தைக்கு பதிலாக வடகிழக்கு இந்தியாவை குறிக்கும் ‘உத்தர்புர்வ்’ என திருத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி தேசிய கீதம் கொண்டு வந்த போது, கோரிக்கைகள் எழும் பட்சத்தில் தேசிய கீதத்தில் மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்று அப்பொழுது குடியரசு தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் தெரிவித்ததை தனது தீர்மானத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரிபின், “வடகிழக்கு மாநிலங்களும் இந்தியாவின் முக்கியமான பகுதியாகும். துரதிருஷ்டமாக தேசிய கீதத்தில் வடகிழக்கு இடம்பெறவில்லை. ஆனால் சிந்த் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. சிந்த் என்பது இந்தியாவில் இந்து பிரிக்கப்பட்டு தற்போது பாகிஸ்தானில் உள்ளது” என்றார்.
தேசிய கீத பாடலானது ரபீந்திர தாகூரால் 1911 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. அப்பொழுது நாடு சுதந்திரம் அடையாமல் இருந்தது. சுதந்திரம் அடைந்த பின்னர் சிந்த் மாகாணம் பாகிஸ்தானுடன் சென்றது. இதனால், தேசிய கீதத்தில் உள்ள சிந்த் என்ற வார்த்தையை மாற்றி சிந்து என்று பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. சிந்து நதி இந்தியாவில் பாய்வதால் அப்படி மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. தற்போது, சிந்த் என்ற வார்த்தைக்குப் பதிலாக வடகிழக்கை குறிக்கும் ‘உத்தர்புர்வ்’ என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.