மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வரவேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரிடமிருந்து தலைவர் பொறுப்பை முறைப்படி கே.எஸ்.அழகிரி பெற்றுக்கொண்டார்.
தமிழகப் பொறுப்பாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செயல்த் தலைவர்களாக வசந்தகுமார், ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, கருத்து வேறுபாடு இருந்தால்தான் ஜனநாயகம் இருக்கும் எனவும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே.எஸ்.அழகிரி நாட்டின் இறையாண்மையையும் மதச்சார்பின்மையையும் காப்பாற்ற மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்திருப்பதாக கூறினார். கூட்டணியில் உள்ள கட்சிகள் மகத்தான சாதனைகளை புரிந்துள்ளன. அதே வேளையில் சில தவறுகளையும் செய்திருக்கலாம், அதை பார்க்க வேண்டிய நேரம் இது அல்ல எனத் தெரிவித்தார்.
மேலும் கமல் தங்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு கமல் வரவேண்டும் எனவும் அழகிரி அழைப்பு விடுத்தார்.