நம்பிக்கை வாக்கெடுப்பு.... எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிறைவேறுமா?

நம்பிக்கை வாக்கெடுப்பு.... எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிறைவேறுமா?
நம்பிக்கை வாக்கெடுப்பு.... எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிறைவேறுமா?
Published on

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவில் கடந்த 6 மாதங்களாக நீடித்த இரு அணிகள் இடையேயான மோதல், கடந்த 21-ஆம் தேதி முடிவுக்கு வந்தாலும், அதே நாளில் புறப்பட்ட மற்றொரு அணியால், மீண்டும் இரண்டு அணிகளாக அதிமுகவில் குழப்பம் தொடர்கிறது. அதன் ஒரு பகுதியாக, மீண்டும் ஒரு கூவத்தூராக மாறியது புதுச்சேரி. டிடிவி தினகரனை நீக்கும் இணைந்த கைகளின் முயற்சியை முறியடிக்க, அங்கு குடியேறிய 19 எம்எல்ஏக்கள், ஒரு வாரத்துக்கு மேலாகியும் அங்கேயே உள்ளனர். முதலமைச்சரை மாற்றுமாறு ஆளுநரிடம் அவர்கள் அளித்த கடிதத்தால், நம்பிக்கை வாக்கு கோர உத்தரவிடுமாறு திமுக மற்றும் பெரும்பாலான எதிர்க் கட்சிகள் ஆளுநரிடம் முறையிட்டுள்ளன. அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் சென்னையில் தங்கியிருக்கும் நிலையில், பிரச்னையை சமாளிக்க மத்திய அமைச்சர்களின் உதவியை நாடி, தமிழக அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தெரிகிறது.

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்த தமிழக அமைச்சர்கள், சந்திப்பில் அரசியல் இல்லை என்றும், தமிழக திட்டங்கள் தொடர்பான சந்திப்பு என்றும் தெரிவித்தனர். ஆனால், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தபோது, அதில் தமிழக அரசியல் இருப்பது, அரசியல் நோக்கர்களுக்கு தெளிவானது.

எதிர்க்கட்சிகளின் அழுத்தம் அதிகரிக்கும் நிலையில், ஆளுநருக்கான வாய்ப்புகள் பற்றி மத்திய அமைச்சர்களுடன் தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள் ஆலோசித்ததாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. கடிதம் அளித்த 19 பேரும் கட்சி மாறவில்லை என்றும், அதனால் அரசின் பெரும்பான்மைக்கு பாதிப்பில்லை என்றும் ஆளுநர் தன்னிடம் கூறியதாக திருமாவளவன் சொல்லியிருக்கிறார். பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் கோரிக்கை வைக்காதது ஏன் என அமைச்சர் ராஜ்நாத்சிங், கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அரசுக்கான ஆதரவு வாபஸ் இல்லை என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் தெளிவுபடுத்தி விட்டனர். எனவே இது அதிமுகவின் உட்கட்சிப் பிரச்னை. அதில் எப்படி தலையிட முடியும்? என்று ஆளுநர் கேட்டதாகவும், அதே கருத்தை ராஜ்நாத் சிங்கும் தெரிவித்ததாகவும் தகவல்கள் உலவுகின்றன.இதன்மூலம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரும் எதிர்க் கட்சிகளின் கோரிக்கை நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com