முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர்.
அதிமுக அம்மா அணியின் அரசியல் நடவடிக்கையில் இருந்து விலகியிருக்கும் தினகரன், ஆகஸ்ட் 5ம் தேதியில் இருந்து மீண்டும் கட்சிப் பணியை தொடரப்போவதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில், 5ம் தேதி சந்திக்க கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நாளை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது அதிமுக இரண்டு அணிகள் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வரும் 5ம் தேதி தினகரன் அதிமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நாளையே ஆலோசனை நடத்த இருக்கிறார். அதிமுக அம்மா அணியில் டிடிவி தினகரனுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நிர்வாகிகளுக்கும் இடையே விரிசல் இருக்கிறது. டிடிவி தினகரனுக்கு 37 எம்எல்.ஏக்கள் ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இருதரப்பினரும் ஆலோசனை நடத்த கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.