கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்க உள்ள 73 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளார். அவர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கேகே சைலஜா உள்ளிட்ட 6 அமைச்சர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் உள்ளிட்ட 5 அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இவர்கள் ஏற்கனவே இரு முறை தொடர்ந்து வெற்றிபெற்று விட்டதால் வாய்ப்பளிக்கப்படவில்லை என மார்க்சிஸ்ட் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
இடதுசாரி கூட்டணியில் பிரதானமாக உள்ள மார்க்சிஸ்ட் கட்சி 85 இடங்களில் களமிறங்க உள்ள நிலையில் அதில் 83 வேட்பாளர்கள் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 83 பேரில் 12 பேர் பெண்கள் ஆவர்.
மார்க்சிஸ்ட் ஆதரவுடன் போட்டியிடும் 9 சுயேச்சைகளும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இடதுசாரி அணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் அதில் 21 வேட்பாளர்கள் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. 140 தொகுதிகள் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு வரும் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.