ஜெ. விசாரணை ஆணையத்தில் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் சொன்னது என்ன?

ஜெ. விசாரணை ஆணையத்தில் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் சொன்னது என்ன?
ஜெ. விசாரணை ஆணையத்தில் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் சொன்னது என்ன?
Published on

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் ஆஜராகி விளக்கமளித்தார்.


ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில், அப்போலோ மருத்துவமனைக்கு தான் தினமும் சென்று வந்ததாகவும், ஆனால் ஒரு நாளும் நேரில் ஜெ.வை பார்த்ததில்லை என முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விசாரணையில் ஆணைய வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு, ஜார்ஜ் அளித்த வாக்குமூலம் தொடர்பாக ஆணைய வட்டாரம் தரப்பில் தெரிவித்திருப்பது குறித்து சில விவரங்கள் வெளி வந்துள்ளன. கடந்த, 2011ல் போயஸ்கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட போது போலீஸ் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்ததேன். ஜெயலலிதா - சசிகலா இடையே கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா வெளியேற்றப்பட்டார் என தெரிந்து கொண்டேன். கடந்த 2015 அக்டோபர் மாதம் சென்னையில் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. இதில் அம்பானி குடும்பத்தை சேர்ந்த முகேஷ் அம்பானி, நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாபச்சன் ஆகியோர் பார்வையாளராக பங்கேற்றனர். இந்தத் தகவலை அப்போது முதல்வருக்கு முன் கூட்டியே தெரிவிக்கவில்லை என்ற காரணத்தால், நான் ஆணையர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டதாக தெரிந்து கொண்டேன்.

மேலும் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் தினமும் மருத்துவமனை சென்று வருவேன். ஆனால், ஜெயலலிதாவை ஒருநாளும் நேரில் பார்த்ததில்லை. கண்ணாடி வழியாக சில விஐபிக்கள் ஜெயலலிதாவை பார்த்ததாக நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டு இருக்கிறேன். 2016 டிசம்பர் 4ம் தேதி மாலை 6 மணியளவில் ஜெயலலிதா உடல்நிலை முடியாததை போலீஸ் வட்டாரங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். உடனடியாக அப்போலோ மருத்துவமனைக்கு சென்றேன். இருப்பினும் அப்போலோ மருத்துவர்களிடம் நேரடியாக ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிக்கவில்லை .

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிய நிலையில், அது தொடர்பாக விசாரணை செய்யவில்லை. மேலும், தீபா ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் என்று அப்போது எனக்கு தெரியாது. அப்போதைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் அப்போலோ மருத்துவமனை வந்த போது, அழைத்து சென்றேன் என வாக்குமூலத்தில் கூறியுள்ளார். குறிப்பாக பல கேள்விகளுக்கு தெரியாது என அவர் பதில் அளித்ததாகவும், இதனால் நாளையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com