பல்லாவரம் அருகே குடிபோதையில் காவலாளியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, அடுக்குமாடி குடியிருப்பு மீது பெட்ரோல் குண்டு வீசிய கல்லூரி மாணவரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பல்லாவரம் அடுத்த பழைய பல்லாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடியிருப்பவர், தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர் விஜய் (23). இவர் கடந்த 31ம் தேதியன்று குடிபோதையில் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியிடம் தகராறில் ஈடுபட்டு காவலாளி ராஜேஷை தாக்கியுள்ளார்.
இது குறித்து ராஜேஷ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். இதனால் பயந்து போன விஜய் குடியிருப்பு வாசிகளை பயமுறுத்த பாலீதின் பையில் பெட்ரோலை நிரப்பி அத்துடன் தீபாவளிக்கு வெடிக்கும் ஆட்டோ பாம் பட்டாசை கட்டி குடியிருப்புக்குள் வெடிக்க செய்துள்ளார். பயங்கர சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டதால் அதிர்ச்சிக்குள்ளான குடியிருப்பு வாசிகள் விஜயை பிடிக்க முயன்றனர்.
அவர் தப்பி செல்ல முயன்றபோது 3 மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவரது கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு வெடிக்காமல் இருந்த பட்டாசுடன் கூடிய பெட்ரோல் நிரப்பப்பட்ட பாலிதீன்
பைகளை கைப்பற்றினர். மேலும் விஜயின் அறையில் இருந்து 12 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் விஜய் மீது 294(b), 324, 336, 285 ஆகிய நான்கு
பிரிவுகளின் கீழ் பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.