சோழவரம் அருகே ஆன்லைன் வகுப்பு பாடம் புரியாததால் முதலாமாண்டு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அருமந்தை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கிரி. இவரது 18 வயது மகள் தர்ஷினி. அண்மையில் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி., முதலாமாண்டு சேர்ந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நேற்று மாலை மாணவி தர்ஷினி ஆன்லைன் மூலம் எடுக்கப்படும் பாடங்கள் தமக்கு புரியவில்லை என தனது தாயிடம் கூறியதாக தெரிகிறது. ஆரம்பத்தில் புரியவில்லை என்றாலும், போகப் போக புரியம், பார்த்து கொள்ளலாம் என தாய் கூறியுள்ளார். எனினும் சமாதானம் அடையாத மாணவி வீட்டின் அறைக்குள் சென்று மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
சந்தேகமடைந்த தாய் சென்று பார்த்தபோது தூக்கிட்ட நிலையில் இருந்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவி தர்ஷினி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் வகுப்பில் நடத்தப்பட்ட பாடம் புரியாததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060