மக்களவைத் தேர்தல் முடிந்ததும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நேற்று ஒரே நாளில் மட்டும், கரூர், திண்டுக்கல், ஈரோடு, பொள்ளாச்சி, கோவை ஆகிய மக்களவைத் தொகுதிகளில் அவர் பரப்புரை மேற்கொண்டார்.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து, திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து வரம்புமீறி பேசி வருவதாக கூறினார். திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமரையும், தம்மையும் கண்ணியக்குறைவாக பேசி வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், பொறுமைக்கும் ஓர் அளவு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்நிலை தொடர்ந்தால் ஸ்டாலினும் இத்தகைய பேச்சுகளை எதிர்க்கொள்ள நேரிடும் என்றார்.
மடத்துக்குளம் பகுதியில் முதல்வர் வாக்கு சேகரித்தபோது, அவ்வழியே ஆம்புலன்ஸ் ஒன்று வந்தததால், தமது பேச்சை நிறுத்திக்கொண்டு அதற்கு வழிவிட செய்தார். முன்னதாக தொண்டாமுத்தூரில் பரப்புரை மேற்கொண்ட அவர், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் இருக்க திமுகதான் காரணம் என குற்றஞ்சாட்டினார். பின் மக்களவைத் தேர்தல் முடிந்ததும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் கூறினார். மக்களை பற்றி மட்டுமே சிந்திக்கும் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.