15 வது நிதிக் குழுவின் மூலம் தமிழகத்திற்குரிய நிதியை முறையாக பகிர்ந்தளிக்க வேண்டும் என நிதிக் குழுத் தலைவர் என்.கே.சிங்கிடம் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி தொடர்பாக என்.கே.சிங்கிற்கு, பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மக்கள் தொகையை தொடர்ந்து கட்டுப்படுத்திய தமிழகத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். நிதிக் குழு மூலம் தமிழகம் தொடர்ந்து தண்டிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர், இதனால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் நிதிகள் மற்ற மாநிலங்களுக்கு அநியாயமாக பகிர்ந்தளிக்கப்படுவதாகவும், அரசியல்வாதிகள், விமர்சகர்கள், ஊடகங்கள், சமூக வலைதளங்களில் அதிகளவில் இது பேசப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற ஏற்றத் தாழ்வுடன் நிதி பகிர்ந்தளிக்கப்படுவது, நாட்டின் ஒற்றமையை பாதிக்கும் என எச்சரித்துள்ளார். ஆகையால், இந்த பிரச்னையில் உரிய கவனம் செலுத்தி தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.