ஊதிய உயர்வு, கட்டணக் குறைப்பு என தூண்டிவிட்டு போராடுவது திமுகதான் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வேண்டுமென்றே திட்டமிட்டு அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று திமுகவின் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. உண்மையான நிலவரம், திமுக ஆட்சியில் இருந்துபோது எவ்வளவு பாக்கி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள், தற்போதைய விலை ஏற்றம் என்ன என அனைத்தும் அவர்களுக்கும் தெரியும். இருந்தாலும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தொமுச தொழிலாளர்களை ஊதிய உயர்வு போராட்டத்துக்கு தூண்டி விடுவதும், தற்போது பேருந்து கட்டணத்தை குறைக்க போராட்டம் நடத்துவதும் திமுகதான் என்பது மனசாட்சிப் படி அவர்களுக்கு தெரியும்.
கடுமையான நிதி இழப்பு ஏற்பட்டிருப்பது தான் உண்மையான நிலை. இதனை சரிசெய்ய வேண்டும். போக்குவரத்து நிறுவனம் பெரிய நிறுவனம். பொதுமக்களுக்கு சேவை செய்யக்கூடிய நிறுவனம். நாள் ஒன்று 1 கோடியே 40 லட்சம் பேர் பயணம் செய்யக்கூடிய நிறுவனம். இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை பெற்ற கடன் ரூ.3392.15 கோடி, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை, ரூ.922.24 கோடி, பணி இருந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை 1528.05 கோடி ஆகும். இவையெல்லாம் திமுக ஆட்சியில் விட்டுச்சென்ற நிலுவைத் தொகைகள். இவற்றுடன் 8500 பேருந்துகளின் ஆயுட்காலம் முடிந்தது. போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான 112 சொத்துக்களை அடகு வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் அதிமுக 2011ல் ஆட்சி அமைத்து, இழப்புகளை தாங்கிக் கொண்டு மக்களுக்கு சேவை அளித்து வந்தது. அத்துடன் திமுக ஆட்சியில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ43.10. தற்போது ரூ.67.23. இவற்றுடன் பேருந்துகளின் விலை மற்றும் உதிரிப்பாங்களின் விலையும் 30 முதல் 40% உயர்ந்துள்ளது. மேலும் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்து துறையில் பாக்கி வைத்துவிட்டு சென்றது சிறந்த நிர்வாகமா? அல்லது நிலுவைத்தொகைகளை வழங்கியது சிறந்த அரசு நிர்வாகமா? என்பதை எண்ணிப்பாருங்கள். போக்குவரத்து நிறுவனம் நலிவடையக்கூடாது என்பதற்காகவும், பொதுமக்களுக்கு சேவை செய்யவும் தான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.” என்று கூறினார்.