நடப்பு ஐபிஎல் சீசனின் நான்காவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி கடைசி பந்து வரை போராடி தோல்வியை தழுவியது. அந்த அணி 217 ரன்களை குவித்து வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றிருந்தது. ராஜஸ்தான் அணியை 222 ரன்கள் என்ற அந்த இலக்கு வரை அழைத்து சென்றவர் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். இருந்தாலும் கடைசி இரண்டு பந்துகளில் அவர் செய்த தவறு அணிக்கு பாதகமாகி விட்டது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். சிலர் அவருக்கு ஆதரவும் தெரிவித்து உள்ளனர்.
என்ன நடந்தது?
அந்த அணி வெற்றி பெற கடைசி இரண்டு பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ஸ்ட்ரைக்கில் இருந்தவர் சாம்சன். சதம் கடந்திருந்தார். அர்ஷ்தீப் சிங் வீசிய அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை டீப் எக்ஸ்ட்ரா கவர் திசையில் தட்டி விட்டிருப்பார் சாம்சன். நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த கிறிஸ் மோரிஸ் ரன் எடுக்க ஸ்ட்ரைக்கர் எண்ட் பக்கம் வந்துவிட்டார். ஆனால் சாம்சன் ரன் எடுக்க மறுத்து விட்டார். அந்த சிங்கிளை அவர் எடுத்திருந்தால் ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் ஒருவேளை வெற்றி பெற்றிருக்கலாம். ஏனெனில் கடைசி பந்தில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டிருக்கும். இருந்தாலும் சாம்சன் கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று விக்கெட்டை இழந்திருப்பார். அதனால் அந்த அணி தோல்வியை தழுவியது.
சிங்கிள் ரன் எடுக்க சாம்சன் மறுத்ததும் அதற்கு மோரிஸ் கொடுத்த ரியாக்ஷன் வைரலானது. அவரது பார்வை ‘நானும் பெரிய ஆட்டக்காரர் தான்!’ என்பது போல இருந்தது.