பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் பக்கத்து வீட்டாரின் கோழிகள் மீது டார்ச் அடித்து பயப்பட செய்து கொன்றதற்காக 6 மாத ஜெயில் தண்டனையும் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதமும் விதித்திருக்கிறது சீன நீதிமன்றம்.
சீனா டெய்லி செய்தியின் படி, ஹுனான் மாகாணத்தை அண்டை வீட்டாரின் மீதான பகையைத் தீர்த்துக் கொள்வதற்காக பழிவாங்கும் நோக்கில் அவரது தோட்டத்துக்குள் பதுங்கிச் சென்று அங்கிருந்த நூற்றுக்கணக்கான கோழிகளை அச்சுறுத்தியே ஒருவர் கொன்றிருக்கிறார் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரலின் போது சீனாவை சேர்ந்த அண்டை வீட்டார் இருவருக்கும் இடையே மரத்தை வெட்டியது தொடர்பாக சண்டை ஏற்பட்டிருக்கிறது. அதில் ஜோங்க் என்பவரின் மரத்தை குவு என்ற நபர் அனுமதியின்றி வெட்டியிருக்கிறார். இதற்கு பதிலடியாக ஜோங்க்கின் மனைவி அந்த மரக்கிளையை இழுத்துச் சென்று வழியை மறித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த குவு பழிக்குப்பழி வாங்க நினைத்திருக்கிறார்.
அதனையடுத்து ஜோங்க்கின் கோழிகள் வைக்கப்பட்டிருந்த பண்ணைக்குள் இரவு நேரமாக பார்த்து பதுங்கிய குவு, அந்த பறவைகளின் டார்ச் லைட் அடித்து அச்சுறுத்தவே இதில் 500க்கும் மேலான கோழிகள் இறந்திருக்கிறது.
கோழிகளின் இறப்புக்கு குவுதான் காரணம் என அறிந்த ஜோங்க் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது காவல்துறை. அங்கு 3000 யுவான் அதாவது சுமார் 35 ஆயிரம் குவுக்கு அபராதமாக விதிக்கப்பட்டது.
இந்த அபராத விதிப்பால் மேலும் கொதித்துப்போன குவு, மீண்டுமொரு முறை ஜோங்க்கின் கோழிப்பண்ணைக்குள் புகுந்து ஏற்கெனவே செய்ததை போல பறவைகள் மீது டார்ச் லைட் அடித்து அச்சுறுத்தியிருக்கிறார். இதனால் எஞ்சிய 640 கோழிகளும் இறந்திருக்கிறது.
கிட்டத்தட்ட தனிநபர் பகையின் காரணமாக 1,100 கோழிகளுக்கு மேல் கொன்றதால் இரண்டு சம்பவங்களையும் கருத்தில் கொண்ட ஹெங்யாங் நீதிமன்றம் ஜோங்கின் சொத்துகளை வேண்டுமென்றே அழித்ததால் குவுக்கு 13,840 யுவான் அதாவது 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து ஆறு மாதம் சிறை தண்டனையையும் அளித்திருக்கிறது.