சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ஏபிவிபி மாணவர் அமைப்பின் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொருளாதார வினாத்தாள் மற்றும் பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பொருளாதாரம் பாடத்திற்கு ஏப்ரல் 25ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என மத்திய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் அறிவித்தார். 10ஆம் வகுப்பு கணித்தேர்வு வினாத்தாள் டெல்லி மற்றும் ஹரியானாவில் மட்டுமே வெளியானதால், மறு தேர்வு நடத்துவது குறித்து 15 நாட்களில் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிபிஎஸ்இ மாணவர்கள் மறுதேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் சில நாடகளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், சிபிஎஸ்இ அலுவலகம் முன்பு இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக சிபிஎஸ்இ அலுவலகம் அமைந்துள்ள சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், வினாத்தாள் லீக்கான விவகாரம் தொடர்பாக ஏபிவிபி மாணவர் அமைப்பின் தலைவர் உட்பட ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களவைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ஏபிவிபி மாணவர் அமைப்பின் சத்ரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் பாண்டே, ட்யூசன் ஒன்றை நடத்தி வந்துள்ளார். பாண்டே மாணவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வினாத்தாளை லீக் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். சதிஷ் பாண்டே 28ம் தேதி நடைபெறவிருந்த தேர்வுக்கு 27ஆம் தேதி வாட்ஸ் அப் மூலம் வினாத்தாளை அனுப்பி இருந்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.