பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இல்லை என்றால்தான் ஆச்சரியம் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தரும் வகையில் திமுக தலைமையிலும், தோழமை கட்சிகளுடனும் சேர்ந்து பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தியுள்ளோம். அந்த அடிப்படையில் இன்று தமிழகத்தின் அனைத்து தலைநகரங்களிலும் மனித சங்கிலி போரட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் ஏதோ கூட்டணி கட்சிகள் என்ற நிலையில் இல்லாமல் பல்வேறு பொது நலஅமைப்புகள், விவசாயிகள், மாணவர்கள் இளைஞர்கள் என பொதுவாக எல்லா தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.
இதுமனித சங்கிலியாக மட்டுமல்ல.. உணர்வை வெளிப்படுத்தக் கூடிய வகையில் உரிமை சங்கிலியாக.. உணர்வு சங்கிலியாக வெற்றிகரமாக நடைபெற்று இருக்கிறது. இதை பார்த்தாவது உடனடியாக உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இதற்கு பிறகும் மத்திய அரசு காவிரி மேலான்மை வாரியம் அமைக்கவில்லை என்று சொன்னால் தமிழகமே இதுவரை கண்டிராத வகையில் ஒரு மிகப் பெரும் போராட்டத்தை அனைத்து கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி விரைவில் அறிவிப்போம்” என்றார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு, பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இல்லை என்றால் தான் ஆச்சரியம். இவர்கள் ஆட்சிக்கு வந்த பின் அவ்வப்போது விலையை உயர்த்தி கொண்டே தான் வருகிறார்கள் என்றார்.