இதுவரை ரூ.248.9 கோடி... 'பறிமுதல்' நடவடிக்கையில் தமிழகத்தை நெருங்கும் மேற்கு வங்கம்!

இதுவரை ரூ.248.9 கோடி... 'பறிமுதல்' நடவடிக்கையில் தமிழகத்தை நெருங்கும் மேற்கு வங்கம்!
இதுவரை ரூ.248.9 கோடி... 'பறிமுதல்' நடவடிக்கையில் தமிழகத்தை நெருங்கும் மேற்கு வங்கம்!
Published on

தேர்தலையொட்டி பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும் பணம், பொருள்கள் மதிப்பில், தமிழகத்தை வெகுவாக நெருங்கி வருகிறது மேற்கு வங்க களம். மேற்கு வங்கத்தில் திங்கள்கிழமை வரை மட்டும் ரூ.248.9 கோடி அளவில் ரொக்கமும் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் சனிக்கிழமை 79.79% வாக்களிப்புடன் முடிவடைந்தது. முதற்கட்டத்தில் புருலியா மற்றும் ஜார்கிராம் மாவட்டங்களில் இருந்து அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கிய 30 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. ஒரு சில இடங்களில் அசம்பாவிதங்களை தவிர்த்து, வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தது. எனினும், வாக்குப்பதிவின்போது பல்வேறு இடங்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஏப்ரல் 1-ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் பாங்குரா, மேற்கு மிட்னாபூர், கிழக்கு மிட்னாபூர் மற்றும் தெற்கு 24 பர்கானா ஆகிய நான்கு மாவட்டங்களில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். இதில், முக்கியமான தொகுதியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் இருக்கிறது. இங்கு மம்தா பானர்ஜி தனது முன்னாள் நெருங்கிய உதவி சுவேந்து ஆதிகாரியை தேர்தலில் எதிர்கொள்கிறார் என்பதால், அனைத்து கண்களும் நந்திகிராம் மீது இருக்கின்றன. இதனால், அங்கு தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தைபோல மேற்கு வங்கத்தில் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள்கள், பணம் வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதற்கிடையே, நேற்று வரை மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் ரூ.248.9 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பிற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் மொத்தம் ரூ.248.9 கோடி ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் "37.72 கோடி ரூபாய் ரொக்கமாகவும், 9.5 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானம் மற்றும் 114.44 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களும் சிக்கியுள்ளன" என்று கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சோய் பாசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை செவ்வாய்க்கிழமை வரை ரூ.319 கோடி அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com